Tuesday, January 22, 2019

ஆரியத் தொல்லை - 1


      நாவலந் தேயத்தில் (இந்தியா) தோன்றிய புத்தரும் மகாவீரரும் ஆரிய மதத்துக்கு எதிராகக்கிளம்பினர்; பல எதிர்ப்புகளைக் கொடுத்தனர். வடநாட்டிலே ஆரியருக்கும் தமிழருக்கும் இடையில் நேர்ந்த போர்கள் பெரும்பாலும் மதந் தொடர்பானவை. நாளடைவில் ஆரியரின் மதம் வடநாடு முழுமையும் பரவுவதாயிற்று. ஆரியர் தமது மதத்தில் சில மாற்றங்களை உண்டாக்கினர். தமிழரின் சிவன், அம்மன் முதலிய கடவுளரைத் தமது மதத்துள் சேர்த்துக் கொண்டார்கள். தமிழக் கோயில் பூசாரிகள் மாயைப் பிராமணராக மாறினர். எல்லாக் கூட்டத்தினரின் அரசரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறி ஆரிய வலைக்குள் விழுந்தனர். இவ்வாறு சில தணிவுகளை உண்டாக்கியபின் அவர்கள் மதம் வட நாடுகளில் பரவிற்று. அவ்வாறிருந்த போதும் தமிழரின் பழைய கொள்கைகள் ஆங்காங்கு நிலைபெற்றிருந்தன.

        தமிழர் தம் பழைய மதக்கொள்கைகள் நிலை பெற்றிருந்த மகத நாட்டில் மகாவீரரும், புத்தரும் தோன்றினார்கள். இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சைனம், புத்தம் என்னும் மதங்கள் ஆரிய மதத்துக்கு மாறுபட்டவை. இம்மதங்கள் விரைவில் மக்களிடையே பரவின. இம்மதங்களுக்கு எதிராக ஆரிய மதத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. புத்தர் ஆரியத்திற்கு எதிராக செயல்பட்டதை மிகத் தெளிவாக அதர்வண வேத தாத்தாச்சாரியார் தமது “இந்து மதம் எங்கே போகிறது” என்ற நூலிலே போட்டு உடைத்துள்ளார். கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரையில் குறிப்பிட்ட சில பொதுமக்கள் சைனம், புத்தம் மதங்களையே கைக்கொண்டனர். உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லப்பட்ட ஒரு சில கொள்கையாளரிடையே மட்டும் அந்த பிராமணமதம் காணப்பட்டது.
       கௌதம புத்தர், மகாவீரர் காலத்தை அடுத்து ஆரியர் சிலர் தென்னாடு வந்தனர். இவர்கள் தென்னாட்டில் மதிப்புப் பெறவில்லை. தமிழர் அவர்களை மிலேச்சர் என அழைத்தனர். மிலேச்சர் என்பதற்கு அந்நியர் (Barbarians) என்று பொருள். மிலேச்சர் என்னும் சொல் ஆரியருக்குப் பெயராயிருந்தமையை நாம் நிகண்டு நூல்களிற் காணலாம். சங்கக் காலத்தில் ஆரியத்துக்கு மதிப்பு உண்டாயிருந்ததாகத் தோன்றவில்லை. மாறாக ஆரியரைப் போரில் வெல்வதே தமிழரின் சிறந்த வீரச் செயல் எனக்கருதப்பட்டது.
         ஆரியப்படை கடந்த , ஆரியப்படை வென்ற என்பது போன்ற பட்டப்பெயர்கள் முற்கால அரசருக்கு இருந்தமையே இதற்குச் சான்று. தமிழ் அரசர் வடவரை வெற்றிகொண்டு  இமயத்தில் தமது மூவேந்தர் அடையாளங்களைப் பொறித்தலும் வீரத்தின் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. ஆரிய மன்னர் தமிழையும் தமிழரையும் இகழ்ந்தனர் எனக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் ஆரிய நாட்டின்மீது படை எடுத்துச்சென்று ஆரிய மன்னர் முடிமிசை பத்தினிக்கல் எடுப்பித்த வரலாற்றை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் மிக மிக அழகாக் கூறுகின்றது.

மூலம்: ஆரியர் தமிழர் கலப்பு, வரலாற்று அறிஞர் ந.சி.கந்தையா

No comments:

Post a Comment