Sunday, May 17, 2020

மலேசியா தமிழர்கள் வீடுகளில் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்


·  கோறணி நச்சியலினால் (Covid-19) முடக்கநிலையில் இருந்தாலும் உலக வாழ் தமிழர்களின் உணர்வும் உணர்ச்சியும் முடக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தமிழினத்தின் மிகப் பெரும் துயரமான நாள், ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 
அவ்வகையில், மலேசியத் தமிழர்களின் உணர்வும் அணையவில்லை. இவ்வாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மலேசியாவில் நடைமுறைப்படுத்திருப்பதால், இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தங்கள் வீட்டில் அகல் விளக்குச் சுடரேற்றி தங்களின்  நினைவேந்தல் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாண்டு, மே 16  தொடங்கி மே 18 வரை தொடர்ந்து மூன்று நாள்கள் மலேசியாவில் தமிழர்கள் தங்கள் வீட்டிலே அகல் விளக்குச் சுடரேற்றி நினைவேந்தல் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர்.
2009 ஆம் ஆண்டு இலங்கை இறுதிகட்டப் போரின் போது ஆதிக்கச் சக்திகள் கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுகள் வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் 100 000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களைப் படுகொலை  செய்தனர் எனப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழத்தில் கொடுரமான இனப்படுகொலை நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகியும் அதற்குக் காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாமல்  இருப்பது மலேசியத் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்பினர்களுக்கும் பெரும் வேதனை அளிக்கின்றது.     இந்த இனப்படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் அனைத்துலக ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய, ஆசிய பண்நாட்டு ஒன்றியங்கள் போன்ற உலக அமைப்புகளிடம் தமிழ் அமைப்புகள் நீதி கேட்டுப் போராடிவருவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மலேசியா வாழ் தமிழர்களின் உள்ளத்தில் அடர்த்தப்பட்டு இருக்கும் உணர்வுகளையும் உணர்சிகளையும் இந்நாட்டுச் சட்டத்திட்டதிற்கு உட்பட்டு அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு நினைவேந்தல் நடவடிக்கையும் ஒன்று. 
இந்த 11ஆவது ஆண்டு நினைவேந்தல் துயர நாளில், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும், மக்களைப் படுகொலை செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதும் மலேசியா வாழ் தமிழர்களின் உறுதியான எண்ணம். அனைத்துலக மாந்தநேயவாதிகள், மாந்தநேய அரசுகள் இதற்குத் துணை போக வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் வேண்டுகோள்.

Monday, May 6, 2019

மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்தல்

மலேசிய தமிழர்களை மடைமாற்றம் செய்ய முனையும் மலேசிய இந்து சங்கத்திற்கும்,  இந்து தர்ம மாமன்றத்திற்கும் மலேசிய தமிழர் தேசிய இயக்கங்களின் கண்டனம்.


அண்மைய காலமாக மலேசியாவில் இயங்கும் இந்து மத இயக்கங்கள் தங்கள் மதச் செயல்பாட்டினை பயணிப்பதிலிருந்து தடம் புரண்டு தமிழர் இன, வரலாறு பற்றியங்களில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டு தானும் குழம்பியதுடன் அல்லாமல்  தமிழர்களையும் குழப்பி வருகின்றனர்.
இந்து தர்ம மாமன்றம் இனம், வரலாறு சார்ந்த பற்றியங்களில் மூக்கை நுழைத்து குழப்பங்களை விளைப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.அவ்வப்போது வரலாறு கருத்தரங்கு ஏற்பாடு செய்வது அதில் மதச் சாயம் பூசுவது, சித்திரை புத்தாண்டை கையில் எடுப்பது அதை தமிழ் புத்தாண்டு என்று பறைச்சாற்றுவது போன்ற  செயல்பாடுகளை கைவிட வேண்டும். தமிழ்ப்பள்ளிகள் மதங்கள் கடந்தது, அங்கே சமய வகுப்பை வழிய புகுத்துவது தமிழர் இனத்தினிடையே மத அளவிலான பிளவை தான் ஏற்படுத்தும்.சமயம் சார்ந்த செயல்பாடுகளை சமயம் சார்ந்த கோவிலில் ஏற்பாடு செய்வதே சிறப்பு.இந்து மத இயக்கமான இந்து தர்ம மாமன்றம் இன, வரலாறு பற்றியங்களில் மூக்கை நுழைக்காமல் இருக்க வேண்டும்.இந்து சங்கமமும் தமிழர்களை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது. ஏற்கனவே மத அளவிளான விடுமுறை தீபாவளிக்கும், தைப்பூசத்திற்கும் உண்டு மீண்டும் ஏன் சித்திரைக்கு விடுமுறை? இந்திய கூட்டுக்குள் உள்ள எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும், இனங்களும் கொண்டாட கூடிய தை 1க்கு தான் பொதுவிடுமுறை தேவை. இனம் சாந்த பற்றியங்களில் இவ்விரு மத இயக்கங்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது என மலேசியத் தமிழர் எழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் முபெவே தமிழகரன் அவர்களும், மலேசிய புதிய தமிழ்த் தலைமுறை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திறன் அவர்களும், மலேசிய செந்தமிழர் பேரவையின் துணை ஒருங்கிணைப்பாளர் திரு. ருகேந்திரன் அவர்களும் தெரிவித்தனர்.
ஏற்கனவே மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் திரு.மோகன் சான் தன்னை தமிழினத் தலைவரென பிரகடனப்படுத்தி தமிழர்களின் கடும் கன்னடத்திற்கு ஆளானது போதாதென தற்போது இந்துக்கள் அனைவரும் தமிழர்கள் என்ற அறிவிலித்தனமான செய்தியை வெளியிட்டுள்ளாா். இனத்திற்கும் மதத்திற்கும் வேறுபாடு தெரியாதவரா இவர்? தெரிந்தும் ஏன் இப்படிப்பட்ட கருத்தை வெளியிடுகிறார் என்பதை நாம் ஆய்வுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். இவரின் கருத்துகளுக்கு தமிழர்களைக் காட்டிலும் இங்கு வாழும் தெலுங்கு மலையாளச் சங்கங்களே முதலில் எதிா்ப்பும் மறுப்பும் தொிவித்திருக்க வேண்டும். காரணம் மோகன் சானின் கூற்று தெலுங்கு மலையாள இன அடையாளத்தையும் பண்பாட்டுக் கூறுகளையும் முடக்கும் செயல் என்பது வெள்ளிடைமலை. ஆனால் அவ்வாறு எதிா்ப்புச் செய்திகள் வெளிவராதது, இவர்களும் மோகன் சானின் கருத்தியலுக்கு உடன்படுவதாகவே கருதக்கூடிய நிலையை உண்டாக்கிவிட்டனர். இது போதாதென்று இந்து மாமன்றம் தமிழறிஞர்களின் கூற்றுக்கு எதிராக சித்திரையைத் தமிழ்ப்புத்தாண்டாக அறிவித்திருப்பது தமிழர்களை மேலும் குழப்புவதாகவே உள்ளது. இவர்களின் இந்தச் செயல் தமிழினத்தின் மரபுவழக்கையும் தமிழினச் சான்றோர்களின் கருத்துகளையும் அவமதிக்கும் செயலாகும். இந்து மத அடிப்படையில் இயங்கும் இந்து சங்கமோ சித்திரையை இந்துப் புத்தாண்டாக அறிவித்திருக்க இந்து மாமன்றத்தின் முரணான செயல்பாடே இவர்களின் முகத்திரையை கிழித்தெறிகிறது. மதத்தின் கடைபிடிப்பை அல்லது கொள்கைகளை இனத்தின் அடையாளமாக காட்டத் துடிப்பது மதவெறியாக இருக்கக் கூடும். மத இன வேறுபாட்டை எத்தனையோ சான்றோர்கள் எவ்வளவோ தெளிவுகளைக் கொடுத்திருந்தாலும் அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு இவர்களுக்குத் தோன்றியது எல்லாம் சரி என்று பரப்புரை செய்வது திட்டமிட்டே செய்யும் செயல். இவர்களின் பேச்சின் பின்னால், தமிழினத்தை மேலும் அடிமை நிலையிலே வைக்க எண்ணம் கொண்டுள்ளதாக தென்படுகின்றது. மேலும், தமிழ் இனத்தின் அடையாளங்களையும் பண்பாடுகளையும் முடிவு செய்ய இவர்கள் யார்? இனத்தின் முடிவுகளை ஒரு தனி மதம் முடிவு செய்வது எந்த வகையில் ஏற்றுக் கொள்வது? மதத்தின் செயல்பாடுகளை மட்டும்தான் முடிவு செய்ய  இவர்களுக்கு உரிமை உண்டே தவிர தனி ஓர் இனத்தின் முடிவுகளில் இவர்கள் தலையிடுவது கண்டிக்கத்தக்கது. தமிழ் இனத்தின் முடிவைத் தமிழ்ச்சான்றோர், தமிழ் நூல்கள், தமிழ மரபு நிலையில் எடுக்கப் பல தமிழ் அமைப்புகள் இங்கே மலேசியாவிலே உள்ளன என்பதை இவர்கள் அறிய வேண்டும். சுறுங்கச் சொன்னால் இந்து மதம் தமிழினத்திற்குத் தலைமை இல்லை. தேவையும் இல்லை. மேலும், தமிழினத்தின் முடிவுகளை மட்டுமே இவர்கள் கையில் எடுப்பார்களே தவிர மற்ற மலையாளமோ, அல்லது தெலுங்கு இன முடிவுகளையோ இவர்கள் எடுத்ததாக செய்திகள் உண்டா? நாம் கேட்டது உண்டா? இல்லவே இல்லை. இதிலிருந்து தெறிகிறதே இவர்களின் சூழ்ச்சி.
தொடர்ந்து தமிழ்ப்பள்ளிகளில் இந்துதர்மத்தை கற்பிற்கும் நடவடிக்கை தமிழர் வாழ்வியலுக்கே எதிரானது. இந்துதர்மம் என்பது வேத- மனு நூலின் அடிப்படையில் நால்வர்ணக் கோட்பாட்டின் வழி பிறப்பால் வேற்றுமையை உணர்த்தும். ஆனால் தமிழர் மறையோ அறத்தின் வழி பிறப்பு ஒக்கும் எல்லா உயிா்க்கும் என மனிதத்தை கடந்து உயிர்கள் வரை நேசிக்கும் தன்மையுடையதாகும். மத அமைப்புகள் மதம் சாா்ந்த பணியை கோவில்களிலும், பணிமனைகளிலும் முன்னெடுக்காமல் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளையும் தமிழ்ப்பள்ளிகளையும் தம்வயப்படுத்தும் செயலைத் தொடர்ந்து மேற்கொண்டிருக்கும் மலேசிய இந்து சங்கத்தையும் மலேசிய இந்து மாமன்றத்தையும் வன்மையாக கண்டிப்பதாக கம்பாா் தமிழர் விழிப்புணர்வு இயக்கத்தின் தலைமைப் பொறுப்பாளர் திரு.தமிழரண் அவர்களும், மகாகவி முத்தமிழ்க் கழகம்,
சொகூரின் ஒருங்கிணைப்பாளர் திரு.தமிழ்த்திரு அவர்களும், தமிழர் ஒற்றுமை இயக்கத் தலைவர் திரு.மகாதேவன் அவர்களும், மலேசியத் தங்கத் தமிழர் இயக்கத்தின் தலைவர் திரு.தங்கராசா அவர்களும் தொிவித்தனர்.
மலேசிய மக்களும் மலேசிய இந்து சங்கம் மற்றும் இந்து தர்ம மாமன்றமும் ஒன்றைத் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். “தமிழர்கள் தமிழ்ச் சமய மரபு வழி வந்தவர்கள்”, ஆங்கிலேயர் வருகைக்கு பின் இந்து, இந்தியா, இந்தியர்கள் என பெயர் வைப்பதற்கு முன்பே சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு  மூத்த வரலாற்று பெருமை கொண்ட தமிழர் தேசிய இன மக்கள் நாங்கள்.
எங்களுக்கென தேசம், மொழி, இனம், பண்பாடு, சமயம், பெருநாட்கள், நாகரீகம், மரபு, வாழ்வியல் மற்றும் வழிமுறைகளைக் கொண்டு உலகத்தின் தொல்குடிமக்களாக வாழ்ந்து வருபவர் நாங்கள்.
தமிழர்கள் நாங்கள் பல சமயத்தைப் பின்பற்றி வந்தவர்கள். இடையில் தோன்றிய மதங்கள் எங்கள் அடையாளமாக தலைமை தாங்க முடியாது.
அதிலும் ஆரிய பிராமணர்கள் வழி தென்னகத்திற்குள் நுழைந்த வைதீக மதம் நால்வகை சாதி பாகுபாடு கொண்டு, இழி சித்தாந்த புராணங்களை ஏற்று, உயிர்க்கொலை யாகங்களை நடத்திப் பின்னாளில் இந்து மதம் என பெயர் பெற்றதுடன் அது தமிழர்கள் மீது திணிக்கப்பட்டது என்பதே வரலாற்று உண்மை.
உங்களின் சித்தாந்த சூழ்ச்சிகள் எங்களிடத்தில் எடுபடாததால், எங்களின் தாய்மொழி தமிழ்ப் பள்ளிகளில் “இந்து தர்ம கல்வி” என உள்ளே நுழைய முனையும் இந்து மாமன்றத்தின் சித்து வேளைகள் இனி தமிழர்கள் இடத்தில் பழிக்காது.
ஆகையால் “நாம் மதத்தால் இந்துக்கள், இனத்தால் தமிழர்கள்” என்று அடிப்படையற்ற செய்தியை டத்தோ மோகன் சாண் மற்றும் இந்து மாமன்றம் தலைவர் போன்றோர்கள் உலறிக்கொண்டிருக்கக் கூடாது என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் தேசிய வீயூக இயக்குநர் திரு பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
மதத்தின் பெருநாட்களை இனத்தின் பெருநாட்களாக சித்தரிப்பது ஏற்க முடியாத கூற்று. எப்படி தெலுங்கர்களுக்கென உகாதி என்றும், மலையாளிகளுக்கென விசு என்றும், தமிழர்களுக்கென “தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு” என்றும் தங்களது இனப் புத்தாண்டுகள் கொண்டாடப் படுகின்றனவோ அதேபோலத்தான் சீனர், சீக்கியர், குசராத்தியர் மற்றும் ஆங்கிலேயர் போன்ற எத்தனையோ தேசிய இனத்தவர்கள் தங்கள் இனப் புத்தாண்டாக அவரவரும் ஒவ்வொரு நாளைக் கொண்டாடி வருகின்றனர்.
இதில் மதப் பெருநாட்களை இனத்தின் புத்தாண்டாக  மாற்றுவது முற்றிலும் தவறானது.
இப்படியிருக்க தமிழர்கள் தங்களுக்கென்று நடைமுறையில் வகுத்து வைத்திருக்கிற தை முதல் நாளை மட்டும் ஏற்காமல் இன்னும் சித்திரையை தமிழ் புத்தாண்டு என்று சொல்வதேன்..?
சித்திரை பெருநாள் என கூறிக் கொண்டாடுவோம். நாம் கேட்கப்போவதில்லை. மாறாக தமிழ் புத்தாண்டு என சொல்லாதீர்கள். அந்த இனத்தின் மகன்கள் தமிழர்கள் நாங்கள் இருக்கிறோம். எங்கள் பெருநாளை அல்லது புத்தாண்டை தமிழர் அல்லாதவர்கள் நிர்ணயிக்கக் கூடாது. அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.
எங்கள் இனத்தின் முன்னவர்கள், வழிகாட்டிகள், பேரறிஞர்கள் எங்களது புத்தாண்டையும் பெருநாட்களையும் துல்லியமாக வகுத்து வைத்துள்ளனர். அதில் மற்றவர்கள் வந்து மூக்கை நுழைக்கக் கூடாது என கடுமையாக எச்சரிப்பதாக தமிழ்ச் சமய பேரவை பொறுப்பாளர் திரு ஆனந்த தமிழன் வலியுறுத்தினார்.
குறிப்பு : இவ்வறிக்கை  நாளிதழ்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டது

Monday, February 4, 2019

ஆரியத் தொல்லை - 2


இந்திய (நாவலந் தேயம்) முழுவதிலும் ஒரு காலத்தில் தமிழர் என்னும் உலகமூத்த இன மக்களே வாழ்ந்தார்கள். ஆரியர் மேற்குத் திசையினின்றும் வந்து நாவலந் தேயத்தை அடைந்தார்கள். அவர்கள் நாவலந் தேயத்தில் சிறிது சிறிதாகக் குடியேறினார்கள். இடை இடையே தமிழ் மக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் போர்கள் நடந்தன. காலத்தில் இரு மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள் வடக்கில். அதனால் வடக்கே புதிய மொழிகளும் புதிய நாகரிகமும் தோன்றின. ஓர் இனத்தின் மொழி திரிந்தால்- மாறினால் அவர்களின் நாகரிகமும் மாறும்.  இப்பொழுது அரப்பா (Harappa) மொகஞ்சதாரோ (Mohenja-Daro) காலம் வரையிலுள்ள தமிழ் மக்களின் வரலாறு வெளிச்சமாயிற்று. ஆரியர் வருகைக்கும் புத்தர் காலத்துக்கும் இடையிலுள்ள தமிழரின் வரலாறு இருளாகவிருக்கின்றது.

ஆரியர் என்போர், ஆசிய தேசத்தினின்றும் வந்து அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினர். இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு2000) சிந்து நதிக்கரையிற் குடியேறினர். ஆரியர் என்னும் சொல்லுக்குப் “பிரபுத்தனம்” என்னும் பொருள் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டதாயினும் அதற்கு அவர் மொழியில் “மிலேச்சர்”  (Barbarian) என்பதே பொருள். இந்தப் புது மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? சிந்து நதிக்கரைகளில் புதிதாக வந்து குடியேறிய மக்களின் மொழி ஆராய்ச்சி, அவர்களின் உற்பத்தியை நாவலந்தேயத்திற்கு அப்பால் காசுப்பியன் (Caspian) ஆரல் கடல்களை அடுத்த நாடுகளுக்கு அப்பால் கொண்டுபோய் விடுகின்றது. ஆரல் கடலோடு ஒரு காலத்து இணைக்கப்பட்டுக் கிடந்த காசுபியன் கடலும் தெற்கே கிடந்த வனாந்தரமும் இம்மக்களை நாகரிகத்தில் முதிர்ந்த பாலிலோனியரோடு கலந்து கொள்ளாதபடி தடுத்தன.தமது நாட்டினின்றும் கிளம்பிய ஒரு கூட்டத்தினர் நீண்டகாலம் தென்கிழக்காக அலைந்து திரிந்தனர். பின்பு தெற்கு நோக்கிச் சென்று சிந்து நதியின் மேற்குக் கரையில் குடியேறியது கி.மு2000 ஆண்டுகள் வரையில் என்பது மேல்நாட்டு ஆசிரியர்களின் துணிபு.

ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து முதன்முதல் குடியேறும்போது குமரி முதல் இமயம் வரை பரவி நாகரிகம் முதிர்ந்த ஒரே இனம் மக்கள் குடியேறியிருந்தன. பரதர் என்னும் தமிழினத்தினர் குடியேறியிருந்தமையின் இந்நாடு “பாரத வருடம்” என்னும் பெயர் பெற்றது என்று விட்டுணு புராணம் கூறுகின்றது. இக்கருத்தைதான் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அண்ணல் அம்பேத்கர் “ இந்தியாவைச் சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழினத்திற்கு மட்டும்தான் உண்டு. தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள்” என்று கருத்துரைத்துள்ளார்.


இந்தியநாடு முழுமையும் பரதவர் என்னும் குடியினர் இருந்தனர். பரதர் என்னும் சொல் உச்சரிப்பு வேறுபாட்டால் பிற்காலத்துப் பல மாறுதல்கள் அடைந்தது. பரதவர் என்னும் பெயர் மலையைக் குறிக்கும் “பார்” என்னும் அடியாகப் பிறந்ததென்பர் டாக்டர் ஓப்பேட் அவர்கள். பார் என்பதன் ஆதிப்பொருள் மலை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழருடையா ஆதி இடம் மலையாகவே இருந்தது. பழைய தமிழ்நாட்டு அரசனுக்குச் சிறப்பாக ஒரு மலை உரியதாக விருந்தது. இது அவனுடைய முன்னோர், மலையிலுள்ளவர்கள் என்பதை ஞாபகப் படுத்துகின்றது. தமிழ்க்கடவுளாகிய முருகனது இருப்பிடங்கள் மலைகளாகக் காணப்படுகின்றது. அக்கடவுள் மலை உச்சிகளிலேயே பெரிதும் வணங்கப்படுகின்றார்.முற்காலத் தமிழர்கள் பல காரணங்களை முன்னிட்டு மலைகளையும் உயந்த இடங்களையும் வாழும் இடங்களாகக் கொண்டனர். தமிழரின் ஆதி இருப்பிடம் எல்லம்மலை ஆகலாம். இது மேருமலையின் ஓர் உச்சி. மேருமலையின் ஒரு கொடுமுடி. சிலர் இன்றைய இலங்கைத் தீவு எனக் கருத்துரைக்கின்றனர். இலங்கைத்   தீவுக்கு எல்லம் என்பது பழைய பெயர். எல்லத்தினின்றும் சென்று யூபிராத்தசு, தைகிரசு (euphrates and tigris) ஆற்றோரங்களில் குடியேறிய மக்கள் அங்குள்ள ஓர் இடத்துக்கும் மலைக்கும் எல்லம் எனப் பெயர் இட்டு வழங்கினர். மற்றொரு சாரார் “பரதர்” என்போர் தமிழ்நாட்டைச் சார்ந்த கடல்வழி நடவடிக்கையும் பயணமும் மேற்கொள்ளும் தமிழர்களே பாண்டியர்களே என்று குறிப்பிடுகின்றனர். எப்படியிருப்பினும் பரதர் என்பது தமிழரையே குறித்தது என்பது திண்ணம்.

சிந்து நதியின் மேற்குக் கரையில் ஆதியில் வந்து குடியேறிய ஆரியர், நாவலந்தேயம் சீர்திருத்தம் அடைந்திருப்பதையும், அது வலிய அரசரால் நன்கு ஆளப்படுவதையும் கண்டனர். இருக்குவேத (Rig Veda) பாடல்கள் அவர்களுடைய 900 கோட்டைகளையும் 7 வலிய அரண்களையும் பற்றிக் கூறுகின்றன. தற்போது இவை பஞ்சாப்பில் இருந்தனவாகலாம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட நாவலந்தேய அரசர் பரதர் எனப்பட்டனர். 20 அரசரையுடைய இப்பரம்பரை, 5 நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து ஆரியர் வருகைக்கு முன் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும் . அவர்களுக்குப் பின் இன்னொரு பரம்பரை ஆண்டனர், இவர்களை ஆரியர் அசுரர் என்று அழைத்தனர். அசுரர் என்பதற்கு இறைவன் என்பது பொருள். இது அரசு என்னும் தமிழ்ப் பதத்தின் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருத இடமுண்டு. இருக்கு வேதத்தில் அசுரர் என்னும் சொல் மேன்மை அல்லதி வலிமை என்னும் பண்பைக் குறிக்கின்றது. இருக்கு வேதத்தின் 10ஆம் மண்டிலத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வுண்மையைத் தத்தர் “பழைய இந்தியா” என்னும் நூலின் 201ஆவது பக்கத்தில் விளக்கியிருக்கின்றார். பிராமணங்களில் அது வேறு பொருளில் வழங்கப்பட்டிருக்கின்றது. அங்கு அது கடவுளின் பகைவரைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது.                                                     

மூலம்: ஆரியர் தமிழர் கலப்பு -  வரலாற்று அறிஞர் ந.சி.கந்தையா..









Tuesday, January 22, 2019

ஆரியத் தொல்லை - 1


      நாவலந் தேயத்தில் (இந்தியா) தோன்றிய புத்தரும் மகாவீரரும் ஆரிய மதத்துக்கு எதிராகக்கிளம்பினர்; பல எதிர்ப்புகளைக் கொடுத்தனர். வடநாட்டிலே ஆரியருக்கும் தமிழருக்கும் இடையில் நேர்ந்த போர்கள் பெரும்பாலும் மதந் தொடர்பானவை. நாளடைவில் ஆரியரின் மதம் வடநாடு முழுமையும் பரவுவதாயிற்று. ஆரியர் தமது மதத்தில் சில மாற்றங்களை உண்டாக்கினர். தமிழரின் சிவன், அம்மன் முதலிய கடவுளரைத் தமது மதத்துள் சேர்த்துக் கொண்டார்கள். தமிழக் கோயில் பூசாரிகள் மாயைப் பிராமணராக மாறினர். எல்லாக் கூட்டத்தினரின் அரசரும் தம்மைச் சத்திரியர் எனக் கூறி ஆரிய வலைக்குள் விழுந்தனர். இவ்வாறு சில தணிவுகளை உண்டாக்கியபின் அவர்கள் மதம் வட நாடுகளில் பரவிற்று. அவ்வாறிருந்த போதும் தமிழரின் பழைய கொள்கைகள் ஆங்காங்கு நிலைபெற்றிருந்தன.

        தமிழர் தம் பழைய மதக்கொள்கைகள் நிலை பெற்றிருந்த மகத நாட்டில் மகாவீரரும், புத்தரும் தோன்றினார்கள். இவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சைனம், புத்தம் என்னும் மதங்கள் ஆரிய மதத்துக்கு மாறுபட்டவை. இம்மதங்கள் விரைவில் மக்களிடையே பரவின. இம்மதங்களுக்கு எதிராக ஆரிய மதத்தால் தலை நிமிர்ந்து நிற்க முடியவில்லை. புத்தர் ஆரியத்திற்கு எதிராக செயல்பட்டதை மிகத் தெளிவாக அதர்வண வேத தாத்தாச்சாரியார் தமது “இந்து மதம் எங்கே போகிறது” என்ற நூலிலே போட்டு உடைத்துள்ளார். கி.மு மூன்றாம் நூற்றாண்டு வரையில் குறிப்பிட்ட சில பொதுமக்கள் சைனம், புத்தம் மதங்களையே கைக்கொண்டனர். உயர்ந்த வகுப்பினர் என்று சொல்லப்பட்ட ஒரு சில கொள்கையாளரிடையே மட்டும் அந்த பிராமணமதம் காணப்பட்டது.
       கௌதம புத்தர், மகாவீரர் காலத்தை அடுத்து ஆரியர் சிலர் தென்னாடு வந்தனர். இவர்கள் தென்னாட்டில் மதிப்புப் பெறவில்லை. தமிழர் அவர்களை மிலேச்சர் என அழைத்தனர். மிலேச்சர் என்பதற்கு அந்நியர் (Barbarians) என்று பொருள். மிலேச்சர் என்னும் சொல் ஆரியருக்குப் பெயராயிருந்தமையை நாம் நிகண்டு நூல்களிற் காணலாம். சங்கக் காலத்தில் ஆரியத்துக்கு மதிப்பு உண்டாயிருந்ததாகத் தோன்றவில்லை. மாறாக ஆரியரைப் போரில் வெல்வதே தமிழரின் சிறந்த வீரச் செயல் எனக்கருதப்பட்டது.
         ஆரியப்படை கடந்த , ஆரியப்படை வென்ற என்பது போன்ற பட்டப்பெயர்கள் முற்கால அரசருக்கு இருந்தமையே இதற்குச் சான்று. தமிழ் அரசர் வடவரை வெற்றிகொண்டு  இமயத்தில் தமது மூவேந்தர் அடையாளங்களைப் பொறித்தலும் வீரத்தின் அறிகுறியாகக் கொள்ளப்பட்டது. ஆரிய மன்னர் தமிழையும் தமிழரையும் இகழ்ந்தனர் எனக் கேள்வியுற்ற சேரன் செங்குட்டுவன் ஆரிய நாட்டின்மீது படை எடுத்துச்சென்று ஆரிய மன்னர் முடிமிசை பத்தினிக்கல் எடுப்பித்த வரலாற்றை இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் மிக மிக அழகாக் கூறுகின்றது.

மூலம்: ஆரியர் தமிழர் கலப்பு, வரலாற்று அறிஞர் ந.சி.கந்தையா

Tuesday, March 6, 2018

நுட்பவியல் / கணினியியல் கலைச்சொற்கள்

மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :



1. WhatsApp      -      புலனம்

2. youtube          -      வலையொளி

3. Instagram      -      படவரி

4. WeChat          -        அளாவி

5.Messanger    -        பற்றியம்

6.Twtter              -        கீச்சகம்

7.Telegram        -        தொலைவரி

8. skype            -          காயலை

9.Bluetooth      -          ஊடலை

10.WiFi            -          அருகலை

11.Hotspot        -          பகிரலை

12.Broadband  -        ஆலலை

13.Online          -        இயங்கலை

14.Offline            -        முடக்கலை

15.Thumbdrive  -        விரலி

16.Hard disk      -        வன்தட்டு

17.GPS                -        தடங்காட்டி

18.cctv                -        மறைகாணி

19.OCR              -        எழுத்துணரி

20 LED              -        ஒளிர்விமுனை

21.3D                  -        முத்திரட்சி

22.2D                -        இருதிரட்சி

23.Projector      -        ஒளிவீச்சி

24.printer          -        அச்சுப்பொறி

25.scanner        -        வருடி

26.smart phone  -      திறன்பேசி

27.Simcard          -      செறிவட்டை

28.Charger          -        மின்னூக்கி

29.Digital            -        எண்மின்

30.Cyber            -          மின்வெளி

31.Router          -        திசைவி

32.Selfie            -        தம் படம் - சுயஉரு - சுயப்பு

33 Thumbnail              சிறுபடம்

34.Meme          -        போன்மி

35.Print Screen -          திரைப் பிடிப்பு

36.Inkjet            -          மைவீச்சு

37.Laser            -          சீரொளி


நன்றி: தமிழ் நெறிக் கழகம் மலேசியா
- தமிழர் இதை  நண்பர்களுக்குப் பகிரலாம்

Tuesday, November 7, 2017

தமிழ் ஆரிய மத வேறுபாடு

தமிழ் ஆரிய மத வேறுபாடு
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆய்வு

 வேதக்காலம்
 தமிழம்
  1. சிறுதெய்வ வணக்கமும் பெருந்தேவ மதமும் கடவுள் சமயமும்.
  2. இல்லத்திலும் கோவிவிலும் உருவ வழிபாடும் எங்கும் உருவிலா வழிபாடும்
  3. தமிழக் குருக்கள்
  4. தமிழ் வாயில்
  5. மறுமையில் நல்வாழ்வும் விண்ணுலகப் பேறும் வீடுபேறும்
  6. வாய்மையால் தூய்மை
  7. மக்கள் நல்லொழுக்கத்தாலும் செங்கோலாட்சியாலும் மழையெனல்

ஆரியம்
  1. பல் சிறுதெய்வ வணக்கம்
  2. வீட்டிலும், வெளியிலும் வேள்வி வளர்த்தல்
  3. பிராமணக் குருக்கள்
  4. வேத மந்திர வாயில்
  5. மறுமையில் விண்ணுலப் பேறு
  6. நீரால் தூய்மை
  7. வேள்வியால் மழையெனல்
                                           

முத்திருமேனி / இந்துமதக் காலம்
தமிழம்

  1. சிவ வழிபாடு / திருமால் வழிபாடு/ கடவுள் வழிபாடு
  2. சிவன் முத்தொழில் தலைவன் / திருமால் முத்தொழில் தலைவன் எனல்.
  3. தமிழ் வழிபாடு ஆரியரால் நீக்கப்பட்டது.
  4. தமிழக் குருக்கள் கோயில் வழிபாட்டுத் தொழிலினின்று விலக்கப்பட்டனர்.
  5. தேங்காய் பழம் படைத்தல்.
  6. துறவறமும் வீடுபேறும் எல்லார்க்கும் உரியன
  7. இல்லறம் துறவறம் என வாழ்க்கைநிலை எல்லார்க்கும் இரண்டே
  8. இல்லறத்தாலும் துறவறத்தாலும் வீடுபேறு
  9. ஒழுக்கத்தாற் சிறப்பு
  10. தமிழும் தேவமொழி யெனல்
  11. ஏழைகள் எல்லாம் தானம் பெறற்குரியர்
  12. கல்வி எல்லார்க்கும் பொது
  13. நாற்குலம் தொழில்பற்றிய பாகுபாடு
  14. கொலைத்தண்டம் எல்லாக் கடுங் குற்றவாளிகட்கும் பொது
  15. தமிழிலும் மறையுண்டு
  16. எல்லா மொழியும் இறைவனுக்கு ஏற்கும்
ஆரியம்
  1. முத்திருமேனி வழிபாடு
  2. நான்முகன், திருமால், உருத்திரன் (சிவன்) ஆகிய மூவரும் முறையே படைப்பும் காப்பும் அழிப்பும் செய்பவர் எனல்
  3. ஆரிய மந்திரமும் சமற்கிருதமும் வழிபாட்டு வாயில்
  4. பிராமணக் குருக்கள்
  5. தீ வளர்த்தல்
  6. துறவறமும் வீடுபேறும் பிராமணர்க்கே உயியன
  7. மாணவம் (பிரமசாரியம்), இல்வாழ்க்கை (கிருகசுதம்), காடுறைவு ( வானப்ரசுதம்), துறவு ( சந்நியாசம்) எனப் பிராமணன் வாழ்க்கை நிலை நான்கு.
  8. துறவறத்தால் மட்டும் வீடுபேறு
  9. பிறப்பால் சிறப்பு
  10. சமற்கிருதமே தேவமொழி; தமிழ் இழிமொழி எனல்.
  11. பிராமணரே தானம் பெறற்குரியவர்
  12. கல்வி பிராமணனுக்கே சிறப்பு
  13. நால்வரணம் இறைவன் படைப்பு
  14. கொலைத்தண்டம் பிராமணனுக்கு இல்லை.
  15. ஆரியத்தில்தான் வேதம் உண்டு
  16. சமற்கிருதம் ஒன்றே  இறைவனுக்கு ஏற்றது
தொகுப்பு/ஆக்கம் : அ.பன்னீர்ச்செல்வம் மலேசியா.
மூலம் : தமிழ் மதம், மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர்

Monday, November 24, 2014

தமிழ் அறிஞர்களுக்கு ஒரு படைப்பு - 20th century tamil activist

20 ஆம் நூற்றாண்டு என்பது தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்கும் ஒரு மறுமலர்ச்சி காலம் என்பது அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் தெரியும். அக்காலகட்டத்தில் தமிழர்களையும் தமிழ் மொழியையும் மீட்டெடுக்கப் பாடுபட்ட சில தமிழ் அறிஞர்களை இக்காணொளியில் காணலாம். எம் பள்ளி மாணவர்களுடன் இணைந்து இப்படைப்பு உருவாக்கப்பட்டது. பயன் அடையுங்கள். தவறு இருந்தால் மன்னிக்கவும்.

Friday, March 21, 2014

47 வகை நீர்நிலைகள்

 47 வகை நீர்நிலைகள்


01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர்              அரண்
02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது
03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு
04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி
05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்
06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு
07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை
08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருநது நீர் ஊறுவது
09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்
10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்
11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு
12. கடல் -(Sea) சமுத்திரம்
13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்
14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய உள்ள நீர் செல்லும் அமைப்பு.
15. கால் - (Channel) நீரோடும வழி
16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி
17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை
18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை
19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை
20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு
22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று
23 குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படு நீர் நிலை.
24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு
25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்
26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு
28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை
29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை
30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்
31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்
32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.
33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்
34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்
35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்
36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்
37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு
38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்
39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு
41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை
42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்
43. மடை -(Small sluice with single venturi) ஒரு கண்ணே உள்ள சிறு மதகு
44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது
45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்
46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்
47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்