Monday, February 4, 2019

ஆரியத் தொல்லை - 2


இந்திய (நாவலந் தேயம்) முழுவதிலும் ஒரு காலத்தில் தமிழர் என்னும் உலகமூத்த இன மக்களே வாழ்ந்தார்கள். ஆரியர் மேற்குத் திசையினின்றும் வந்து நாவலந் தேயத்தை அடைந்தார்கள். அவர்கள் நாவலந் தேயத்தில் சிறிது சிறிதாகக் குடியேறினார்கள். இடை இடையே தமிழ் மக்களுக்கும் ஆரியருக்கும் இடையில் போர்கள் நடந்தன. காலத்தில் இரு மக்களும் கலந்து ஒன்றுபட்டார்கள் வடக்கில். அதனால் வடக்கே புதிய மொழிகளும் புதிய நாகரிகமும் தோன்றின. ஓர் இனத்தின் மொழி திரிந்தால்- மாறினால் அவர்களின் நாகரிகமும் மாறும்.  இப்பொழுது அரப்பா (Harappa) மொகஞ்சதாரோ (Mohenja-Daro) காலம் வரையிலுள்ள தமிழ் மக்களின் வரலாறு வெளிச்சமாயிற்று. ஆரியர் வருகைக்கும் புத்தர் காலத்துக்கும் இடையிலுள்ள தமிழரின் வரலாறு இருளாகவிருக்கின்றது.

ஆரியர் என்போர், ஆசிய தேசத்தினின்றும் வந்து அலைந்து திரியும் ஒரு கூட்டத்தினர். இற்றைக்கு 4000 ஆண்டுகளுக்கு முன் (கி.மு2000) சிந்து நதிக்கரையிற் குடியேறினர். ஆரியர் என்னும் சொல்லுக்குப் “பிரபுத்தனம்” என்னும் பொருள் பிற்காலத்தில் கொடுக்கப்பட்டதாயினும் அதற்கு அவர் மொழியில் “மிலேச்சர்”  (Barbarian) என்பதே பொருள். இந்தப் புது மக்கள் எங்கிருந்து வந்தார்கள்? சிந்து நதிக்கரைகளில் புதிதாக வந்து குடியேறிய மக்களின் மொழி ஆராய்ச்சி, அவர்களின் உற்பத்தியை நாவலந்தேயத்திற்கு அப்பால் காசுப்பியன் (Caspian) ஆரல் கடல்களை அடுத்த நாடுகளுக்கு அப்பால் கொண்டுபோய் விடுகின்றது. ஆரல் கடலோடு ஒரு காலத்து இணைக்கப்பட்டுக் கிடந்த காசுபியன் கடலும் தெற்கே கிடந்த வனாந்தரமும் இம்மக்களை நாகரிகத்தில் முதிர்ந்த பாலிலோனியரோடு கலந்து கொள்ளாதபடி தடுத்தன.தமது நாட்டினின்றும் கிளம்பிய ஒரு கூட்டத்தினர் நீண்டகாலம் தென்கிழக்காக அலைந்து திரிந்தனர். பின்பு தெற்கு நோக்கிச் சென்று சிந்து நதியின் மேற்குக் கரையில் குடியேறியது கி.மு2000 ஆண்டுகள் வரையில் என்பது மேல்நாட்டு ஆசிரியர்களின் துணிபு.

ஆரியர் சிந்து நதிக்கரையில் வந்து முதன்முதல் குடியேறும்போது குமரி முதல் இமயம் வரை பரவி நாகரிகம் முதிர்ந்த ஒரே இனம் மக்கள் குடியேறியிருந்தன. பரதர் என்னும் தமிழினத்தினர் குடியேறியிருந்தமையின் இந்நாடு “பாரத வருடம்” என்னும் பெயர் பெற்றது என்று விட்டுணு புராணம் கூறுகின்றது. இக்கருத்தைதான் இந்திய அரசியல் சட்டத்தை வகுத்த அண்ணல் அம்பேத்கர் “ இந்தியாவைச் சொந்தம் கொண்டாடும் உரிமை தமிழினத்திற்கு மட்டும்தான் உண்டு. தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்தவர்கள்” என்று கருத்துரைத்துள்ளார்.


இந்தியநாடு முழுமையும் பரதவர் என்னும் குடியினர் இருந்தனர். பரதர் என்னும் சொல் உச்சரிப்பு வேறுபாட்டால் பிற்காலத்துப் பல மாறுதல்கள் அடைந்தது. பரதவர் என்னும் பெயர் மலையைக் குறிக்கும் “பார்” என்னும் அடியாகப் பிறந்ததென்பர் டாக்டர் ஓப்பேட் அவர்கள். பார் என்பதன் ஆதிப்பொருள் மலை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கின்றது. தமிழருடையா ஆதி இடம் மலையாகவே இருந்தது. பழைய தமிழ்நாட்டு அரசனுக்குச் சிறப்பாக ஒரு மலை உரியதாக விருந்தது. இது அவனுடைய முன்னோர், மலையிலுள்ளவர்கள் என்பதை ஞாபகப் படுத்துகின்றது. தமிழ்க்கடவுளாகிய முருகனது இருப்பிடங்கள் மலைகளாகக் காணப்படுகின்றது. அக்கடவுள் மலை உச்சிகளிலேயே பெரிதும் வணங்கப்படுகின்றார்.முற்காலத் தமிழர்கள் பல காரணங்களை முன்னிட்டு மலைகளையும் உயந்த இடங்களையும் வாழும் இடங்களாகக் கொண்டனர். தமிழரின் ஆதி இருப்பிடம் எல்லம்மலை ஆகலாம். இது மேருமலையின் ஓர் உச்சி. மேருமலையின் ஒரு கொடுமுடி. சிலர் இன்றைய இலங்கைத் தீவு எனக் கருத்துரைக்கின்றனர். இலங்கைத்   தீவுக்கு எல்லம் என்பது பழைய பெயர். எல்லத்தினின்றும் சென்று யூபிராத்தசு, தைகிரசு (euphrates and tigris) ஆற்றோரங்களில் குடியேறிய மக்கள் அங்குள்ள ஓர் இடத்துக்கும் மலைக்கும் எல்லம் எனப் பெயர் இட்டு வழங்கினர். மற்றொரு சாரார் “பரதர்” என்போர் தமிழ்நாட்டைச் சார்ந்த கடல்வழி நடவடிக்கையும் பயணமும் மேற்கொள்ளும் தமிழர்களே பாண்டியர்களே என்று குறிப்பிடுகின்றனர். எப்படியிருப்பினும் பரதர் என்பது தமிழரையே குறித்தது என்பது திண்ணம்.

சிந்து நதியின் மேற்குக் கரையில் ஆதியில் வந்து குடியேறிய ஆரியர், நாவலந்தேயம் சீர்திருத்தம் அடைந்திருப்பதையும், அது வலிய அரசரால் நன்கு ஆளப்படுவதையும் கண்டனர். இருக்குவேத (Rig Veda) பாடல்கள் அவர்களுடைய 900 கோட்டைகளையும் 7 வலிய அரண்களையும் பற்றிக் கூறுகின்றன. தற்போது இவை பஞ்சாப்பில் இருந்தனவாகலாம். ஆரியர் வருகைக்கு முற்பட்ட நாவலந்தேய அரசர் பரதர் எனப்பட்டனர். 20 அரசரையுடைய இப்பரம்பரை, 5 நூற்றாண்டுகளாக ஆட்சிபுரிந்து ஆரியர் வருகைக்கு முன் வீழ்ச்சி அடைந்திருக்க வேண்டும் . அவர்களுக்குப் பின் இன்னொரு பரம்பரை ஆண்டனர், இவர்களை ஆரியர் அசுரர் என்று அழைத்தனர். அசுரர் என்பதற்கு இறைவன் என்பது பொருள். இது அரசு என்னும் தமிழ்ப் பதத்தின் உச்சரிப்பு வேறுபாடு எனக் கருத இடமுண்டு. இருக்கு வேதத்தில் அசுரர் என்னும் சொல் மேன்மை அல்லதி வலிமை என்னும் பண்பைக் குறிக்கின்றது. இருக்கு வேதத்தின் 10ஆம் மண்டிலத்தைத் தவிர மற்ற இடங்களில் எல்லாம் கடவுளைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இவ்வுண்மையைத் தத்தர் “பழைய இந்தியா” என்னும் நூலின் 201ஆவது பக்கத்தில் விளக்கியிருக்கின்றார். பிராமணங்களில் அது வேறு பொருளில் வழங்கப்பட்டிருக்கின்றது. அங்கு அது கடவுளின் பகைவரைக் குறிப்பதற்குப் பயன்படுகின்றது.                                                     

மூலம்: ஆரியர் தமிழர் கலப்பு -  வரலாற்று அறிஞர் ந.சி.கந்தையா..









No comments:

Post a Comment