Sunday, May 17, 2020

மலேசியா தமிழர்கள் வீடுகளில் 11ஆம் ஆண்டு நினைவேந்தல்


·  கோறணி நச்சியலினால் (Covid-19) முடக்கநிலையில் இருந்தாலும் உலக வாழ் தமிழர்களின் உணர்வும் உணர்ச்சியும் முடக்கப்படவில்லை என்பதுதான் உண்மை. தமிழினத்தின் மிகப் பெரும் துயரமான நாள், ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 11-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உலகத் தமிழர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. 
அவ்வகையில், மலேசியத் தமிழர்களின் உணர்வும் அணையவில்லை. இவ்வாண்டு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மலேசியாவில் நடைமுறைப்படுத்திருப்பதால், இருக்கும் இடத்தில் இருந்துகொண்டே தங்கள் வீட்டில் அகல் விளக்குச் சுடரேற்றி தங்களின்  நினைவேந்தல் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இவ்வாண்டு, மே 16  தொடங்கி மே 18 வரை தொடர்ந்து மூன்று நாள்கள் மலேசியாவில் தமிழர்கள் தங்கள் வீட்டிலே அகல் விளக்குச் சுடரேற்றி நினைவேந்தல் செய்து தங்கள் உணர்வை வெளிப்படுத்துவர்.
2009 ஆம் ஆண்டு இலங்கை இறுதிகட்டப் போரின் போது ஆதிக்கச் சக்திகள் கலவரங்களை ஏற்படுத்தியும், வானூர்திகளில் இருந்து கண்மூடித்தனமாக குண்டுகள் வீசியும், எறிகணைகளை வீசியும், நேரடியாகச் சுட்டும், சித்திரவதை செய்தும் 100 000 க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களைப் படுகொலை  செய்தனர் எனப் பொது ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தமிழீழத்தில் கொடுரமான இனப்படுகொலை நிகழ்ந்து 11 ஆண்டுகள் ஆகியும் அதற்குக் காரணமான கொடியவர்கள் தண்டிக்கப்படாமல்  இருப்பது மலேசியத் தமிழர்களுக்கும் தமிழ் அமைப்பினர்களுக்கும் பெரும் வேதனை அளிக்கின்றது.     இந்த இனப்படுகொலைக்குக் காரணமானவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்கவும் ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்கவும் அனைத்துலக ஐக்கிய நாட்டுச் சபையின் மனித உரிமைப் பேரவை, ஐரோப்பிய, ஆசிய பண்நாட்டு ஒன்றியங்கள் போன்ற உலக அமைப்புகளிடம் தமிழ் அமைப்புகள் நீதி கேட்டுப் போராடிவருவதும் குறிப்பிடத்தக்கது. இவற்றைக் கருத்தில் கொண்டு, மலேசியா வாழ் தமிழர்களின் உள்ளத்தில் அடர்த்தப்பட்டு இருக்கும் உணர்வுகளையும் உணர்சிகளையும் இந்நாட்டுச் சட்டத்திட்டதிற்கு உட்பட்டு அவ்வப்போது வெளிபடுத்தியுள்ளனர். அவ்வகையில் இவ்வாண்டு நினைவேந்தல் நடவடிக்கையும் ஒன்று. 
இந்த 11ஆவது ஆண்டு நினைவேந்தல் துயர நாளில், இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும், மக்களைப் படுகொலை செய்தவர்களுக்குத் தகுந்த தண்டனை கிடைக்க வேண்டும் என்பதும் மலேசியா வாழ் தமிழர்களின் உறுதியான எண்ணம். அனைத்துலக மாந்தநேயவாதிகள், மாந்தநேய அரசுகள் இதற்குத் துணை போக வேண்டும் என்பதே மலேசியத் தமிழர்களின் வேண்டுகோள்.

No comments:

Post a Comment